×

ஆன்மிகத்தால்தான் நாடு முன்னேறி செல்கிறது; இந்தியாவுக்கு காளியின் ஆசி எப்போதும் உண்டு; பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

அகமதாபாத்: பெண் தெய்வமான காளியை பற்றி பல்வேறு சர்ச்சைகள் கிளப்பி விடப்பட்டுள்ள நிலையில், ‘ஆன்மிக சக்தியின் மூலமாகவே இந்தியா முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. நமது நாட்டுக்கு காளியின் ஆசி எப்போதும் உண்டு,’ என்று பிரதமர் மோடி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் கொல்கத்தா ராமகிருஷ்ண மடம் ஏற்பாடு  செய்திருந்த சுவாமி ஆத்மாஸ்தானந்தாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் காணொளி மூலமாக பிரதமர் மோடி பேசினார். அவர் தனது உரையில், ‘ஒட்டு மொத்த உலகமும் மாற்றம் காண்பதும், நிலையான அனைத்தும் அன்னையின் உணர்வால் வியாபித்துள்ளது. மேற்கு  வங்கத்தில் நடக்கும் காளி பூஜையின் போது இந்த உணர்வைக் காண முடிகிறது. சுவாமி  விவேகானந்தர் போன்ற யுக புருஷர்களின் வடிவில் சுவாமி ராமகிருஷ்ண  பரமஹம்சரால் இந்த உணர்வு மற்றும் ஆற்றலுக்கு ஒளி வழங்கப்பட்டது. காளி அன்னை  பற்றி சுவாமி விவேகானந்தர் கொண்டிருந்த ஆன்மிக தொலைநோக்கு சிந்தனை, அவரிடம்  தலைசிறந்த ஆற்றலை ஏற்படுத்தியது. சுவாமி ஆத்மாஸ்தானந்தாவிடம் இதே போன்ற அர்ப்பணிப்பையும், ஆற்றலையும் நம்மால் காண முடிந்தது. காளியின் ஆசி இந்தியாவுக்கு எப்போதும்  உண்டு. இந்த ஆன்மிக சக்தியின் மூலம் உலகின் நன்மைக்காக இந்தியா முன்னோக்கி  சென்று கொண்டிருக்கிறது,’  என தெரிவித்தார். காளி தெய்வம் புகைப் பிடிப்பது, ஓரினச்சேர்க்கையாளர்கள் கொடியை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படத்தை லீனா மணிமேகலை என்ற பெண் இயக்குனர் சமீபத்தில் வெளியிட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், மணிமேகலைக்கு ஆதரவாக பேசிய திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பி.யான மகுவா  மொய்த்ரா, ‘என்னைப்  பொறுத்தவரை பெண் தெய்வம் காளி புகைபிடிப்பவர்தான், மாமிசம்  சாப்பிடுபவர்தான். ஒவ்வொருவரும் தங்களுடைய கடவுளை கற்பனை செய்து கொள்ள  சுதந்திரம் இருக்கிறது,’ என்று கருத்து தெரிவித்தார். இதன் காரணமாக இந்த பிரச்னை மேலும் பெரிதானது. இதுபோல், காளி தெய்வம் பற்றி சர்ச்சைகள் நடந்து வரும் நிலையில், காளியை பிரதமர் மோடி புகழ்ந்து பேசியுள்ளார்  குறிப்பிடத்தக்கது….

The post ஆன்மிகத்தால்தான் நாடு முன்னேறி செல்கிறது; இந்தியாவுக்கு காளியின் ஆசி எப்போதும் உண்டு; பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,Kali ,Modi ,Ahmedabad ,Khali ,
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு செலுத்தும் வாக்குகள் வீணாவது உறுதி : பிரதமர் மோடி